Friday, July 18, 2008

அலையில் நீந்தும் மனவெளி (அ) அவஸ்தையின் ரசிகை

இன்னும் எழ முடியாமல் இருக்கிறது உன் ஞாபகங்கள் அழுத்தும் மனசு. இமைகளை அறுத்து கண்களை எடுத்து செல்லும் உன் நினைவுகள், ஆயுதமானது பற்றிய யோசனை வரவே இல்லை. சாணம் மெழுகிய மண் தரை முற்றத்தில் மல்லாந்து படுத்தபடி வான் பார்த்து பேசுகிறேன். வானம் பூமியை காதலிப்பதாய் ரகசியம் சொல்கிறது.

வலிகளை உணர்ந்த வானுக்கு நானும், எனக்கு வானும் ஆறுதல் பரிமாறிக் கொண்டோம். ஊடே, தெரிந்தோ தெரியாமலோ பாய்ந்து வந்த அருவம் காற்றாகவும் இருக்கலாம். அப்போது அதை தென்றல் என்றேன். அது நான் நானாக இருந்த காலம்.

சூரியன் உதிக்கும் திசையிலிருந்து வருகிறது என் உயிர் குடிக்கும் உன் வாசம். வானிடம் பேச்சை நிறுத்திவிட்டு கண்கள் மூடி வாசனை நுகர்கிறேன். விழி திறக்கையில் மண் தரை முற்றமெங்கும் உன் வார்த்தைகள் சிதறி கிடக்கின்றன. ஒவ்வொன்றாய் பொறுக்குகிறேன். கைகளுக்குள் அகப்படாமல் கீழே விழுவதில் ஒன்று என் முகமாக இருக்கிறது.

உன் கூந்தலில் சிந்தும் நீர் பட்டு, மீண்டும் முளைக்கிறது முகம். உன் வேடிக்கைப் பார்த்து ஆளரவமற்ற மனவெளியெங்கும் சிரிப்பலைகள். அதில் என்னால் நீந்த முடிகிறது. ஆழ்கடல் இருட்டில் திசையின்றி செல்கிறது பயணம். திடீரென முளைக்கும் மரத்திலிருந்து அழைக்கிறது உன் கைகள். நீந்திய களைப்பில் உன்னருகே அமர்கிறேன்.

கண்களில் நீ தீட்டிய மை பெயர்ந்து என் கைகளில் விழுகின்றன. ஒவ்வொன்றும் கனம். தாங்கும் சக்தியற்று நடுங்குகின்றன கைகள். ‘விழப்போகிறது... விழப்போகிறது... ம்... எடுத்துக்கொள்’ என்கிறேன். நீ என் அவஸ்தையை ரசிக்கிறாய். உடல் கோணலாகி, என் பாதத்திலேயே விழுகின்றன மை.

கனம் தாங்காத நோஞ்சான் கால்கள் வலியால் அலறி தனியாக அமர்கிறது. உன் சிரிப்பின் சத்தத்தில் ஆல மர இலைகள் அந்தரத்தில் தொங்கின்றன. விடாமல் தொடர்கிறது சிரிப்பு. சுற்றும் முற்றும் பார்க்கிறேன். நீ மட்டுமே சிரிக்கிறாய். வானம் அதிர்ந்து அங்கிருந்து ஒரு துண்டு நிலம் பெயர்ந்து வருகிறது. என் மீது விழுமோ என் அருகில் விழுமோ தெரியாது.

11 comments:

Aruna said...

//வானம் அதிர்ந்து அங்கிருந்து ஒரு துண்டு நிலம் பெயர்ந்து வருகிறது. என் மீது விழுமோ என் அருகில் விழுமோ தெரியாது.//


ரசனையான சோகம்....அதிலும் இந்த வரிகள் அழகு.....
அன்புடன் அருணா

Unknown said...

மிக அருமையான வரிகள்..ஒவ்வொரு சொல்லிலும் ரசனை துளிர்க்க எழுதியிருப்பது அருமை நண்பரே :)

ஆடுமாடு said...

//ரசனையான சோகம்...//

நன்றி அருணா.

ஆடுமாடு said...

நன்றி ரிஷான்.

Ken said...

கனம் தாங்காத நோஞ்சான் கால்கள் வலியால் அலறி தனியாக அமர்கிறது. உன் சிரிப்பின் சத்தத்தில் ஆல மர இலைகள் அந்தரத்தில் தொங்கின்றன. விடாமல் தொடர்கிறது சிரிப்பு. சுற்றும் முற்றும் பார்க்கிறேன். நீ மட்டுமே சிரிக்கிறாய். வானம் அதிர்ந்து அங்கிருந்து ஒரு துண்டு நிலம் பெயர்ந்து வருகிறது. என் மீது விழுமோ என் அருகில் விழுமோ தெரியாது.


நீங்களுமா ? ஆமா உங்களுக்குத்தான் கல்யாணம் ஆகிட்டதா பைத்தியக்காரன் சொன்னாரே :)

Anonymous said...

"தங்கள் படைப்பை எங்கள் வலைச்சிற்றிதழில் வெளியிடுவதில் வாசகர்களாகிய நாங்கள் பெருமைப்படுகிறோம்!"

மானமிகு நறுமுகய்,
சுதந்திர எழுத்துக்களை கொண்டாடும்தமிழ்மானம்

"It is not about Freedom of Expression but it is all about Expression of Freedom!"

ஆடுமாடு said...

//நீங்களுமா ? ஆமா உங்களுக்குத்தான் கல்யாணம் ஆகிட்டதா பைத்தியக்காரன் சொன்னாரே :)//


அய்யா, கென்னு, கல்யாணத்துக்கும் இதுக்குன் என்னய்யா சம்மந்தம்?

superlinks said...

jeyamohan kuriththu oru katturai

vinavu.wordpress.com

கோவை விஜய் said...

வானம் அதிர்ந்து அங்கிருந்து ஒரு துண்டு நிலம் பெயர்ந்து வருகிறது. என் மீது விழுமோ என் அருகில் விழுமோ தெரியாது.

அழகு வரிகள் சொல்லும்
அர்த்தம் தரும் வார்த்தைகள்.
ஆழமாய்ச் செல்லும் சோகம்
ஆடவர் என்றும் பாவம்

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com

ஹேமா said...

வணக்கம் ஆடுமாடு.புற்களைத் தாண்டி மனித மனங்களையும் மேய்ந்து வருகிறீர்கள்.அருமை.

ஆடுமாடு said...

கோவை விஜய், ஹேமா நன்றி