Friday, June 20, 2008

அடையாத பாழ்

முத்தாண்டி புலவரு... முத்தாண்டி புலவருன்னு ஒருத்தரு. நல்ல பாடுவாரு. திருச்செந்தூர்க்காரரு. முருகனை மட்டும் பாடிட்டு இருந்தவருக்கு என்னாச்சோ தெரியலை, கால்போன போக்குல போயிகிட்டே இருக்க ஆரம்பிச்சாரு.

யாருகிட்டயும் போயு, வயிறு பசிக்கு, சாப்பாடு போடுனெல்லாம் கேட்ட மாட்டாரு. யாராவது குறிப்பறிஞ்சு கேட்டாதான் சாப்பாடு. யாரும் இவரை சரியா கவனிக்கலைன்னா சுள்ளுனு கோவம் வந்துருனம். அறம் பாடிருவாரு. அறம் பாடுனா எல்லாமே நாசமா போயிரும். அப்டியொரு ஆளு,

கால் போன போக்குல வந்தவரு, கீழாம்பூருங்கற ஊருக்கு வந்தாரு.

இந்த ஊரு என்னன்னா ஒரு காலத்துல போர் வீரங்க இருந்த ஊரு. அதாவது ஆண்மையூர்ங்கறது ஆம்பூரா மாறிபோச்சு. இங்க வீரர்கள் இருப்பாங்க. இந்த ஊர்லயிருந்து 15 கிலோமீட்டர் தூரத்துல, மேற்கு தொடர்ச்சி மலை இருக்கு. அங்க இருக்குத கொட்டுந்தளத்துலயிருந்து, முரசு கொட்டுவாங்க. அப்படி கொட்டுனா அந்த சத்தம் கேட்டு வீரர்கள் இங்கயிருந்து கொட்டுந்தளத்துக்கு கெளம்பி போகணும். அப்படியான ஊரு இது.

புலவரு ஊர்லயிருந்த கோயிலெல்லாம் பாத்துட்டு, ஐயமாரு தெருவுல நடந்து போயிட்டிருந்தாரு. சரியான பசி. 'இவருதான் பசிக்குது, சோறு போடுங்க"ன்னு கேக்க மாட்டாரே. ஒரு வீட்டு திண்ணையில சுந்தரம் ஐயருன்னு ஒருத்தரு உக்கார்ந்திருந்தாரு. அவருக்கு எதிர்ல பெரிய தோப்பு. அந்த ஐயரோட அண்ணன் தம்பி, சொக்காரங்களுக்கானது. அதுல ஒரு பாதியை பங்களா மாதிரி கட்ட, செங்கலு, மண்ணெல்லாம் அடிச்சு போட்டிருந்தாங்க. புலவரு, அந்தப் பக்கம் நின்னுகிட்டு, ஐயரு சாப்பிட கூப்பிடுவாருன்னு பாத்தாரு.

அவரு, 'யாரோ வெளியூரு காரர் போலிருக்கு, இங்க யாரையும் தேடி வந்திருப்பாரு'ன்னு நினைச்சுட்டாரு. புலவரை அவரு கண்டுக்கலை. அவருக்கு பசிக்குன்னு ஐயருக்கு எப்படி தெரியும்?. கொஞ்ச நேரத்துல புலவரு, ஐயரு இருந்த திண்டுல உக்கார்ந்தாரு. ஐயரு உடனே, 'எந்த ஊரு? யாரை பார்க்க வந்திருக்கேரு'ன்னாரு.

புலவரு, பதிலை சொல்லாம, 'எதிர்ல இருக்குத நிலத்துல என்ன பண்ண போறீங்க"ன்னு கேட்டாரு.

'பங்களா கட்ட போறோம்'னாரு ஐயரு.

உடனே ஒரு பாடலை பாடி, 'ஏழுசுந்தரம் பார்பட்டு பாழ் அடைவது என்னாளோ"ன்னு முடிச்சிருக்காரு. ஐயருக்கு அறம் பாடியிருக்காருன்னு புரிஞ்சுப்போச்சு.

'என்னய்யா இப்படி பாடிட்டே"ன்னாரு.

புலவரு, சும்மா அவரை பார்த்துட்டு, அவர் பாட்டுக்கு போயிட்டாரு. ஐயருக்கு கொழப்பம்.
எப்படி ஏழு சுந்தரத்துக்கு இந்த எடம் இருக்குன்னு இவனுக்கு தெரியும்னு. உடனே தெருவுல இருந்த பிள்ளையாரை போய் கும்புட்டுட்டு, 'இதை நீதாம்பா பாத்துக்கணும்'னு வேண்டிட்டு வந்துட்டாரு. மறுநாள் பங்களா கட்டுததுக்கு ஆளுவோலாம் வந்துட்டாவோ. திடீர்னு பாத்தா ஏழு சுந்தரத்துல, உடம்பு சரியில்லாம இருந்த ஒரு சுந்தரம் போய் சேர்ந்துட்டாரு.

பெறவென்னா... இன்னைக்கு வரைக்கும் பாழ் இடம் பாழாவே இருக்கு. பக்கத்துல வீடு, கடைன்னு என்னென்னவோ மாற்றம் வந்தாலும், இந்த எடம் மட்டும் கட்ட முடியாம அப்படியே கெடக்குது.

12 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம் :(

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இதுவும் நல்லா வந்திருக்குங்க.

ambi said...

//இந்த ஊர்லயிருந்து 15 கிலோமீட்டர் தூரத்துல, மேற்கு தொடர்ச்சி மலை இருக்கு. அங்க இருக்குத கொட்டுந்தளத்துலயிருந்து, முரசு கொட்டுவாங்க.//

கரக்ட், சாண்டில்யன் கதை ராஜ முத்திரைல குறிபிட்டு இருப்பாரு.

அந்த பாழ் போட்டோ இருக்கா?

கிருஷ்ணா said...

அண்ணா கதை அருமை..இது உண்மை கதையா?
அந்த பங்ளா வடக்கு தெருவா தெற்கு தெருவா ?
எங்கே இருக்கு?

அன்புடன்
கீழாம்பூர் கிருஷ்ணா

ஆடுமாடு said...

கயல்விழி,

ம் :( - இதுக்கும்

சென்ஷி

:))
-இதுக்கும் எனக்கு அர்த்தம் தெரியலைங்க.

சுந்தர்ஜி, நன்றி.

ஆடுமாடு said...

//கரக்ட், சாண்டில்யன் கதை ராஜ முத்திரைல குறிபிட்டு இருப்பாரு//

அம்பி, இது எங்க ஊர்க்கதை.
போட்டோ ஊருக்கு போனா எடுத்துட்டு வாரேன்ங்க.

ஆடுமாடு said...

//அந்த பங்ளா வடக்கு தெருவா தெற்கு தெருவா ? //

தெற்கு தெருவுல.

டாக்டர் கிருஷ்ணமூர்த்தி வீடு தெரியுமா? அதுக்கு எதிர்ல இருக்கு.

நன்றி கிருஷ்ணா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்-ன்னா உம் கொட்டறது கதை சொல்லிட்டு இருக்கும்போது அதிகம் குறிக்கிடக்கூடாதுன்னு தான்..

:(- இது அந்த வீடுகட்ட நினைச்சவரைப்பத்திய கவலை ..

;) - இது இப்ப சும்மா சிரிப்பான் விளக்கத்தோட இணைப்பாக

கிருஷ்ணா said...

நன்றி

ஆடுமாடு said...

//ம்-ன்னா உம் கொட்டறது கதை சொல்லிட்டு இருக்கும்போது அதிகம் குறிக்கிடக்கூடாதுன்னு தான்..//


ஓ அப்படியா?

நன்றி கயல்விழி

வல்லிசிம்ஹன் said...

சரியான ஆளு.

அறம் பாட இவருக்கென்ன உரிமை இருக்குனு தெரியலை.:(

பேசாதவருக்கு ஏன் பாடல்!!

பாழ் வீடு என்று சொன்னால் அவருக்குத்தான் போய்ச் சேரும் பாபம்.
ஆண்மையூர் விளக்கம் அருமை.

கிருத்திகா ஸ்ரீதர் said...

நல்லாருக்கு...