Monday, February 18, 2008

சாமி

புகைப்படமெடுப்பவன் வருவது முன்பே தெரிந்திருந்ததால், மூக்காண்டியை அழைத்து முகச்சவரம் செய்திருந்தார் ஆண்டியய்யா. அழகுணர்ச்சி கூடிவிட்டதாக நினைத்துக்கொண்டவர் இரண்டு கைகளாலும் முகத்தைத் தடவிப்பார்த்தார். ஒழுங்காகச் சவரம் செய்யப் படாததால் தாடையின் கீழ் பக்கம் சரசரவென்று இருந்தது. மூக்காண்டியை அழைத்தால் இப்படித்தான் வேலைப் பார்ப்பான். இடப்பக்க மீசையை வேறு கொஞ்சம் குறத்துவிட்டான். பெரிய திருகிய மீசைதான் அவருக்கு அழகே. வழக்கமான கம்பீரம் குறைந்தது போலிருந்தது. மீண்டுமொருமுறை மீசையைத் திருக்கிக்கொண்டார். மீசை ஆணின் முக வெளிப்பாட்டைத் தீர்மானிப்பது. கம்பீரத்தைத் தருவது. திருகிய பெரிய மீசை இருந்தால் பேச்சிலும் ஒரு தொனி வந்துவிடுகிறது. கரகர குரலில் கொஞ்சம் அதிகாரம் கலந்த பேச்சு இருந்தால்தான் மீசைக்கு மரியாதை. ஆண்டியய்யா பேச்சிலும் அப்படியொரு தொனி. எதிராளியை பயங்கொள்ளவைக்கும் தொனி.

ஆனால் ஆண்டியய்யாவின் இளமை வீரம் செறிந்ததாகாவும் இருந்திருக்கிறது. கருப்பசாமிக்கோயில் முன்பு வந்த தகராறில் போலிஸ்கார் ஒருவரை ஒரு கையால் தூக்கி தூர எறிந்ததை ஊர் முழுவதும் பேசுவார்கள். ஆண்டியைய்யாவின் தங்கையும் எதிர்வீட்டு முத்தம்மா பாட்டியும் சந்தித்துக்கொண்டால் அவரது இளமைகால வீரம்தான் பேச்சின் பெரும் பகுதியாக இருக்கும்.

"அணையில தண்ணிய அடச்சி வச்சிட்டானுவோ , இருக்கது ஆழ்வார்க்குறிச்சி குளத்து தண்ணிதான். இந்தத் தண்ணிக்குப் பாப்பாங்குளத்துக் காரனும் பரும்புக்காரனுவோளும் சண்டைப் போட்டுட்டு இருக்க, நம்மூருக்கு எங்கிருந்து தண்ணி வர? எல்லோரும் வந்து ஆண்டியைய்யாட்ட சொன்னாங்க. சத்தம் போடாம மறுநா ராத்திரி ஆளுகளை கூட்டிட்டுப் போனாரு. கிழ்பக்க மடைய புடுங்கித் தண்ணிய திருப்பிட்டு, ராத்திரி பூரா அங்கேயே இருந்தாரு. கேள்விப்ப்ட்டு பாப்பாங்குளத்துக்காரனுவோ வந்துட்டானுவோ.'எவனாவது மடை கிட்ட வந்தா ஒருத்தனுக்கும் உசுரு இருக்காதுன்னு கையில அருவாளை வச்சிட்டு சத்தம் போட்டாரு. ஒரு பய முன்ன வரலையே.'

பிச்சம்மா இதைச் சொல்வாள். இதுக்குச் சற்றும் குறைவில்லாத மற்றொரு வீரச்செயலைச் சொல்வாள் ஆண்டியய்யாவின் தங்கை.

தாத்தாக்கள் வரலாறாகவும், பேரன்கள் அந்த வரலாறைச் சுமப்பவர்களாகவும் இருப்பது யார் விட்ட சாபமோ?

''தாத்தா, போட்டாக்காரரு வந்துட்டாரு "என்றான் பேரன். இந்த ஐந்து வயது பேரனுக்குத் தாத்தாதான் சேக்காளி. தாத்தாவின்றி அவனும் அவனின்றி தாத்தாவும் வெகு நேரம் இருந்ததில்லை. மகன் வயிற்றுப் பேரன்.

வீட்டுத்தோட்டத்து வாதமடக்கி மர நிழலில் அமர்ந்து பாக்கு உடைத்துக்கொண்டிருந்தவர் எழுந்தார். தரையில் கிடந்த துண்டையெடுத்து உதறினார். தனியாக உடைத்து வைக்கப்பட்டிருந்த பாக்குகளை ஒரு கையால் எடுத்துக்கொண்டு மறு கையில் பேரனைத்தூக்கி முத்தமிட்டார்.

"மீசை குத்துது."

"வலிக்கவாடா செய்யுது"

"கீச்சமா இருக்கு"

"நீயும் வளர்ந்தா இதுமாதிரி மீச வளரும்"

'நான் பெரிசா வளப்பேன்"

'எம்புட்டுப் பெருசா?"

"இவ்வளவு பெரிசா'என்று இரண்டு கைகளையும் விரித்துக் காடினான்.

"அப்படியால கள்ளப்பயல".என்று சிரித்துவிட்டு மீண்டுமொருமுறை முத்தம் கொடுத்தார்.

வாசலில் கருப்பு பேண்டும் வெள்ளை சட்டையும் அணிந்த ஓர் இளைஞன் வெறுப்பாக உட்கார்ந்திருந்தான். ஆழ்வார்க்குறிச்சியிலிருந்து சைக்கிளில் வந்த களைப்பு முகத்தில். அருகில் பூதத்தானும் மந்திரமும் இருந்தார்கள்.

"நீ தான் போட்டாக்காரனாடே?"

"ஆங்.."

"அழ்வார்க்குறிச்சியில நீ யாருடே"

"சொள்ளமுத்து தெரியுமா?"

"எந்த சொள்ளமுத்து?"

"பட்டாளத்து..."

"ஆமா,அவனுக்கு நீ என்ன உண்டும்?"

"எங்கப்பாதான் அவரு"

"சர்யா போச்சு போ. அவரு மவனாடா..இப்ப எப்படி இருக்கான் உங்கப்பன்?"

"நல்லா இருக்காரு"

"ஒரு காலத்துல ரெண்டு பேரும் இங்கேயிருந்து விருதுநகர் சந்தைக்கு வண்டியில சாமான் கொண்டு போயிருக்கோம். அவன்ட்ட நான் கேட்டம்னு சொல்லு. சும்மா இருந்தாம்னா ஒரு எட்டு இங்க வந்து பார்க்க சொல்லு."

"ஆங்.."

"செரி நீ எங்கவச்சு எடுக்க போற?"

"மொகம் மட்டும்தான...இந்தா கிழ்பக்கம் சொவத்து முன்னால நின்னுங்க?"

"செத்த நில்லு வாரேன்" என்றவர் வீட்டுக்குள் போனார்.

கண்ணாடியில் முகம் பார்த்தார். தலைமுடியையும் மீசையையும் சீவினார். பிறகு மீசையை திருகினார். மந்திரமும் பூதத்தானும் வெளியில் நின்று அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"கெழத்துக்கு வயசு கொறையுதுன்னு நினைப்பு?"என்றான் பூதத்தான்.

பொந்தன் நமட்டுச் சிரிப்பு சிரித்தான்.

"ஏம்ல சிரிக்கியோ?"

"இவ்ளவு வயசுலயும் தெடமாதான் இருக்கே"

"எழுபத்திரண்டு வயசுலாம் ஒரு வயசால. ஒங்க தாத்தன் தொண்ணூத்தியெட்டு வயசுவரைக்கும் கல்லு மாதிரிலா இருந்தாரு.அப்பமும் ஒரு மூட்டை சாக்கை முதுவுல தூக்கிட்டு வந்துருவாரே...நீ அரை மூட்டை கடலையே தூக்கதுக்கே வாப்பாருத"

"பொங்குன சோத்தை பானையோட திங்குத ஆளுலா அவரு"

புகைப்படக்காரர் கேமராவில் கோணம் பார்த்தார். முகத்தில் கொஞ்சம் தோரணைக்காட்டி கைகளை விறைப்பாக வைத்துக்கொண்டு நின்றார் ஆண்டியய்யா.

"ஏம் இப்படி நிக்கியோ? வழக்கமா இருக்கத மாதிரி இருங்க"

"ஆங்.."

திரும்பவும் அதே விறைப்பு. சிறிது நேரம் ஒழுங்குபடுத்திவிட்டு படம் எடுத்தார்.

"தம்பி நல்லா வரும்லா"

"இருக்குத மொகம் அப்டியே வந்துரும்."

"என்னைக்குத் தருவே"

"இன்னா ரெண்டு நாள்ல"

"ரெண்டு நாளோ, மூணு நாளோ, சரியா என்ன கெழமைனு சொல்லு."

"இன்னைக்குப் பொதனா, வெள்ளிக்கிழமை மத்தியானம்."

"செரி' என்றவர், பூதத்தானிடம் திரும்பி, "ஏல அப்பம் படம் வரைதவனை சனிகெழம வரச்சொல்லிரு. கோயில்ல மத்த வேலையெல்லாம் ஒழுங்கா நடக்கா? பந்தக்காரன் போன வருஷம் போட்ட மாதிரி தொங்கலா போட்டுறாம?"

"அதெல்லாம் சரியா இருக்கும். இப்பவும் தொங்கலா போட்டம்னா துட்டுக் கெடைக்காதுன்னு சொல்லியாச்சுலா"

"பூக்காரனுக்கு எவ்வளவு பணம்னு பேசியாச்சா?"

"போன தடவை கொடுத்ததோட அதிகமா வேணுமாம், வெல வெலதாச்செல்லாம் ஏறிப்போச்சுங்காம்"
"சரி கூட பத்தம்பத கொடுக்க சொல்லுங்க, வேறென்ன செய்ய?"

"ஆங்.."

"சரி சாப்டேலால"

"நாலு மணிவரைக்குமா மனுஷன் சாப்புடாம இருப்பான்"

"அப்பண்ணா நீத்தண்ணி மோராவது குடிச்சுட்டுப் போங்கல"

"அதெல்லாம் வேண்டாம்" - கிளம்பினர்.

இரண்டு மூன்று நாட்களாகத் திடீர் மழை பெய்திருந்தது.தொடர் மழை இல்லையென்றாலும் தூறல் நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டிருந்தது. வீட்டைச் சுற்றிலும் இளம் பச்சை நிறத்தில் புற்கள், இப்போதுதான் பிறந்த குழந்தை மாதிரி தலை காட்டிக் கொண்டிருந்தன.

வீட்டு வாசலின் இடப்பக்கம் முருங்கை மரத்தினடியிலிருந்த சிறு திரட்டில் கொத்துமல்லி செடிகள் முளைத்திருந்தன. தானாக முளைத்த செடிகள்.

ஆண்டியய்யா கொத்துமல்லிச்செடிகளை ஒவ்வொன்றாக பிடுங்கினார். பேரன் அவரது தோளில் சாய்ந்துகொண்டிருந்தான்.

"இந்தாப்பா.. இத கடிச்சுத் தின்னு. உடம்புக்கு நல்லது."

"நீயும் தின்னு தாத்தா"

"ஏ போக்கிரியாண்டி, ஒனக்கு கொடுத்தா நீ,எனக்குத் தாரியாங்கும், தின்னுடா' என்றவர் அருகில் புளியங்கொட்டையிலிருந்து வெடித்து வளர்ந்திருந்த சிறு செடியைப் பிடுங்கினார்.

குழந்தைகளோடு பேசுவது நடப்பது இனிமையானது. தாமே குழந்தையாகி பின்னோக்கி வாழ்வது. ஆண்டியய்யா குழந்தையாகியிருந்தார்.

இம்மாதிரி இருவரும் பாசத்தில் நனைகிற நாட்களில் கொஞ்ச தூரம் நடப்பது வழக்கம்.மிஞ்சிப்போனல் வேல் டீக்கடை வரை. இன்னும் நடக்கலாம் என்றால் கோவன்குளம் ரயிலடிவரை. இந்த நடையின் போது பேரனுக்குச் செம்புலிஙகம் கதையிலிருந்து மலைக்கள்ளன் கதைவரை சொல்லிக்கொண்டே போவார். ஆனால் அவன் விருப்பமாகக் கேட்பது மந்திரமூர்த்திக்கதை.குடும்பக் கோயில் கதை. இதில் சங்கிலிபூதம் அவனுக்கும் விருப்பமாகி இருந்தது. ஆனால் இலேசில் முடிகிற கதையல்ல. கொஞ்சம் கொஞ்சமாக பேரனது மூளைக்குள் ஏற்றிவிட்டார்.

கோயிலில் பூடங்கள் வெள்ளையடிக்கப்பட்டிருந்தன. சிறியதும் பெரியதுமாக இருப்பத்தேழு பூடங்கள். அந்த திறந்தவெளி கோயில் வளாகத்தில் அனைத்துப் பூடங்களும் பளிச்சென்று இருந்தன. நான்கு வண்டி ஆற்றுமணல், கோயில் வளாகம் முழுவதும் தரையில் பரப்பபட்டிருந்தன. வில் கதை கேட்க வருபவர்கள் நிம்மதியாக உட்கார இந்த ஏற்பாடு.

பந்தல் வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் தென்னந்தட்டிகளும் கம்புகளுமாக கோயில் அடைசலாக இருந்தது.
பூதத்தார் பூடத்துக்கு முன்பாக நின்றிருந்தான் அந்த ஓவியன். அவனது வலப்பக்கம் படப்புச்சோறுக்கு அடுப்பு மூட்டுவதற்கான மூன்று பெரிய கற்கள் தரையில் கிடந்தன. சதுர அளவில் இருந்த ஒரு கல்லை எடுத்து பூடத்துக்கு முன்பு போட்டு ஏறினான். வரைவதற்கு வாகாக இருந்தது. பென்சிலால் வரையலானான். அவனது கையில் மாடலாக ஆண்டியய்யாவின் புகைப்படம்.

கோயில் வாசல் படியைத்தொட்டு வணங்கிவிட்டு உள்ளே வந்த ஆண்டியய்யாவிடம், ஏழுட்டு வழவு சப்பாணி, "என்ன மாமோவ், ஒம்மதான் வரைய போறாம் போலுக்கு" என்றான்.
"ஆங்.. என்னத்தை வரையுதாம்னு பாப்பம்"என்றவர், அவனுக்குப் பின் பக்கம் நின்றுகொண்டு கவனித்தார்.

அந்த ஓவியன் அவரை ஒரு மாதிரி பார்த்துவிட்டு, தன் வேலையைத் தொடர்ந்தான்.
முகம், மீசை, கண்கள், இவற்றுக்குத்தான் அவரது புகைபடங்கள் தேவையாயிருந்தது. தலையில் கிரீடம், கையில் பெரிய அரிவாள் போன்றவற்றை ஏற்கெனவே வரையப்பட்டிருக்கிற அடையாளங்களின் அடிப்படையில் அவனே வரைய வேண்டும்.

பென்சிலால் வரைந்துவிட்டு கல்லிலிருந்து இறங்கி , தான் வரைந்ததைப் பார்த்தான். பிறகு கழுத்தை சாய்த்து கோணலாகப் பார்த்தான். வலது கை கீழிறங்கியிருந்த்து. சரி செய்தான்.

ஆண்டியய்யா அதைப் பர்த்துவிட்டு அந்த ஓவியனிடம் கேட்டார்.

'எம் மூஞ்சு மாதிரி வரும்லா"

'வரைஞ்சு முடிஞ்சதும் பாருங்க"

"அப்பதான் எல்லாம் தெரிஞ்சுருமே" என்றவரிடம் சப்பாணி, 'ஏம்யா பறக்கேரு. அதான் ஒம்ம போட்டாவை கையில வச்சிருக்காருலா?" என்றான்.

இதற்கு முன்பெல்லாம் இப்படியல்ல. பூடங்களில் சாமியை வரைவது இல்லாதிருந்தது.கடந்த இரண்டு கொடைகளுக்கு முன்பு,மேலத்தெரு கருப்பசாமி கோயிலில் பூடத்தில் படம் வரைந்திருந்தார்கள் எப்போதும் இல்லாத அதிசயமாக.

அதிலிருந்து இங்கும் வரைய வேண்டும் என்ற பேச்சு வந்து இப்போது நிறைவேறி விட்டது. சங்கத்துக்கு வருடம் ஒரு முறை தலைவர் மாறி கொண்டே இருப்பார். ஆண்டியய்யா பல முறை தலைவராக யிருந்திருக்கிறார்.அப்போதெல்லாம் இப்படியொரு பிரச்னை வந்திருந்தால் வேண்டாமென்று சொல்லியிருப்பார். இப்போது கூட சொல்லிப்பார்த்தார். பெரும்பாலானோர் தங்கள் பிடியில் உடும்பாக இருக்க, இவரும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிவிட்டது. பிறகு பூதத்தாரை எப்படி வரையலாம் என்று பேசிப் பேசி இவரே மாடலாகவும் போனார்.

அச்சு அசலாக ஆண்டியய்யாவின் உருவம் பூடத்தில் இருந்தது. அவருக்குப் பூரிப்பு தாளவில்லை. கையில் பெரிய அரிவாளுடனும் நெருப்புத்தெறிக்கும் கண்களுடன் ஆக்ரோஷமாக வந்திருந்தது படம். அதையே பார்த்துக் கொண்டிருந்தவருக்குத் தமது இளமை காலம் கண்முன் வந்து கனவு தந்து போனது. தமது தோற்றம் பற்றி அவருக்கே ஒரு கெத்து. பேரன் பூடத்தின் முன்பு நின்று 'தாத்தா தாத்தா என்று அழைத்தான்.
"ஏல சாமிடா அது... கும்புடு"

"இல்ல தாத்தா நீதான்"

'பூதத்தாருப்பா.... கும்புடலைனா சாமி அடிக்கும்"

'போ தாத்தா நீதான் அது"

"ஏய்..அப்படி சொல்லபடது. சாமிடா"

"நீதான் . உன்னய போயி கும்புடசொல்லுதியே தாத்தா....சேக்காளிய யாராவது கும்புடுவாங்களா?"

22 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஒரு விதமான நிதானத்துடன் கதை அழகாய் நகர்கிறது. கதையின் முடிவும் எனக்குப் பிடித்திருந்தது.

ஆடுமாடு said...

ஊரில் நடந்த ஒரு சம்பவம்தான் இது. கதையாக்கினேன். எப்போதோ சிஃபியில் எழுதியது.

நன்றி சுந்தர்.

பாச மலர் / Paasa Malar said...

தலைமுறை இடைவெளி நன்கு மண்வாசனையுடன் வெளிப்படுகிறது..

//தாத்தாக்கள் வரலாறாகவும், பேரன்கள் அந்த வரலாறைச் சுமப்பவர்களாகவும் இருப்பது யார் விட்ட சாபமோ//

நல்ல வரிகள்..

ஆடுமாடு said...

//தலைமுறை இடைவெளி நன்கு மண்வாசனையுடன் வெளிப்படுகிறது//

நன்றி பாச மலர்.

ஹரன்பிரசன்னா said...

நல்லா இருக்கு.

ஆடுமாடெல்லாம் சிஃபியில் எழுதுமா? லிங்க கொடுங்க. பாத்துக்கிடுதோம்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

"நான்கு வண்டி ஆற்றுமணல், கோயில் வளாகம் முழுவதும் தரையில் பரப்பபட்டிருந்தன. வில் கதை கேட்க வருபவர்கள் நிம்மதியாக உட்கார இந்த ஏற்பாடு."
அடி ஆத்தி .. எம்புட்டு சொகமா ருக்கும்ம்ம்.. சில்லுனு அங்கன கூடி செத்த நேர இருந்துட்டு பொறவு அப்படியே கிடந்தா வில்லு பாட்டுகாரவுக பாடுதாவளா இல்ல ஆடுதாவளான்னு விசனமில்லாம கிடக்கலாமில்ல..... கிராமக் கோயிலுக்கே கூட்டிச்சென்று விட்டீர்கள்.. வாழ்த்துக்கள்...

ஆடுமாடு said...

வணக்கம்,. ஹரன்,

//லிங்க கொடுங்க. பாத்துக்கிடுதோம்//

லிங்க்லாம் எங்க போய் தேடுறது. இது என்னோட டெக்ஸ்டை காப்பி பண்ணி போட்டிருக்கேன்.

ஆடுமாடு said...

//அடி ஆத்தி .. எம்புட்டு சொகமா ருக்கும்ம்ம்...//

ஆமா, சுகமாத்தான் இருக்கும். இப்பலாம் ஆத்துல மணலையே பார்க்க முடியாது. சுண்ட சுண்ட அள்ளிட்டாங்க.

நன்றி கிருத்திகா.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
துளசி கோபால் said...

எப்படிய்யா இப்படி எழுதறீர்!!!!!

அட்டகாசமான நடை.

நானும் சேக்காளியக் கும்புட்டுக்கிடணும் போல:-))))

ஆடுமாடு said...

துளசி டீச்சர்,

//நானும் சேக்காளியக் கும்புட்டுக்கிடணும் போல:-))))//

நன்றி.

குசும்பன் said...

மிக அருமையாக இருக்கு!

உங்கள் கதையில் இருக்கும் கிராமத்து பேச்சினால் ஊர் நினைவு வருகிறது!!!

ஆடுமாடு said...

//ஊர் நினைவு வருகிறது!!!//

நன்றி (குசும்பன்) புதுமாப்பிள்ளை.

ESMN said...

அண்ணாச்சி,
என்ன ஒரு மாசமா பதிவ காணும்?
சீக்கிரமா ஒரு நல்ல கதைய போடுங்க...

வீரமணி said...

சார் வணக்கம்
ரொம்ப நாளாச்சி.
கதை படித்தேன் நன்றாக உள்ளது.
தாத்தாவுக்கும்,பேரனுக்குமான உறவு.
ஊர் ஞாபகம் வருகிறது.

முடிந்தால்
தொலைபேசியில் பேசுங்கள்

அன்புடன்
வீரமணி

கானகம் said...

ஆடுமாடு அண்ணாச்சி.. நல்லா இருக்கு. நம்மூரு கதையை வலையில படிக்கிறப்போ என்னா சொகமாருக்குங்கிறீங்க?? அட அட.. கலக்குறீங்க .. சீக்கிரம் எழுதுங்க இன்னொன்னு..

ஜெயக்குமார்

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

தொடரட்டும் இந்த எழுத்து

ரமேஷ் வைத்யா said...

கடிதம் பார்த்து உங்கள் bloக் பார்த்தேன். சுவாரசியமாக இருக்கிறது. பழைய பதிவுகளை தேர்ந்தெடுத்துப் படித்துவருகிறேன்.
என்னிக்குக் குடிக்கலாம். (உங்களுக்கு நான் வாங்கித் தருகிறேன். நானாகிய நாலு பேருக்கு மட்டும் நீங்கள் வாங்கித்தந்தால் போதும்)

Anonymous said...

என்னது, நீங்க குடிப்பீங்களா.???!!!!

ஆடுமாடு said...

எருமைமாடு,வீரமணி, கானகம், ரமேஷ், அனானி அனைவருக்கும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அந்தத் தாத்தாவை இப்பவே பார்க்காணும் மாதிரி ஒரு கதை எழுதிட்டீங்க.

இந்த மாதிரி மனிதர்கள் உலா வரும் பூமியைப் பார்த்தே நாளாச்சே என்று வருத்தமாக இருக்கு.
வெகு நேர்த்தி ஆடுமாடு.

இராம்/Raam said...

அட்டகாசம்.... முடிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.... :)