Friday, November 23, 2007

கூவெலக்காரன் - கேரக்டர் 4

''நீ வேல பாக்குத எழவுல உம் புள்ளைலுக்கு தீவனம் போட்டே முடியாதல''ன்னான் கட மூக்கன்.

டீக்கட வச்சிருந்தான். டீக்கடன்னுதான் பேரு. ஓட்டலு மாதிரி எல்லாம் இருக்கும். கட பூரா சமையப்பறையிலயிருந்து வந்த புகை அடிச்சு, கருப்பா இருக்கும். சொவத்துல கைய வச்சு இழுத்தா கையெல்லாம் கரியா போவும். யாராவது வெளியூர் ஆளுவோ வெள்ளைசட்டைய போட்டுட்டு வந்து கடையைல சாஞ்சு கருப்படிச்சு, புலம்பிட்டு போவானுவோ. மூக்கனும் என்ன செய்வாம்? பொங்கலுக்கு மட்டும்தான் வெள்ளையடிப்பு. என்னதான் அடி அடின்னு அடிச்சாலும் சனியன் கருப்பு போவாது. அடுத்த நாளே இன்னும் கருப்படிச்சுரும். அதனாலயே கடக்கு இன்னொரு பேரும் வச்சிருக்கானுவோ ஊர்ல. ‘கருப்புக்கட‘.

மூக்கன் சொன்னது காதுல விழாதது மாதிரி பீடிய சுண்ட இழுத்துட்டு வாசல்ல சாஞ்சுக்கிட்டு நின்னாம் கருப்ப நம்பி. தலையில சீசனு துண்டை கெட்டியிருந்தாம். எவனயோ சொல்லுதாம்னு பரக்க பாத்துட்டு நிக்காம்.

‘‘காது பழுத்துட்டால''

‘‘... ... ...''

‘‘ஏல உன்னய தான...'' ன்னாம் திரும்பவும்.

‘‘ஆங். என்னயதானா கூப்ட. சொல்லு.''

‘‘இந்த சவுடாலுக்கெல்லாம் கொறச்ச இல்ல... காலைல உன் மூத்த மவ வந்தா, டீ வாங்கிட்டு போனா அப்பா துட்டு தரும்னு. அடுத்தாப்ல ரெண்டாவது புள்ள வந்தது நாலு இட்லி வாங்குச்சு. செத்த நேரத்துல அடுத்த புள்ள வந்தது மூணு வடய வாங்கிட்டு போச்சு. இப்பம் நீ உம் மவன கூப்டுட்டு வந்திருக்க. இப்டி கடயில பொறக்கி தின்னா எப்டி... ஒண்ணும் வெளங்குத மாதிரி தெரியல''ன்னான்.

சிரிச்சாம் கருப்ப நம்பி.

‘‘சிரில... ஆங்கங்கெட்டவன''

‘‘இன்னும் ரெண்டு புள்ளலு வராம இருந்ததே...''

‘‘த்தூ''ன்னான் மூக்கன்.

ரெண்டு பேரும் சின்னப் புள்ளைல இருந்தே சேக்காளியோ. அதுனால கண்ட மேனிக்கு எடக்கு பண்ணிக்கிடுவானுவோ. கருப்ப நம்பிக்கு ஆறு பிள்ளைலுவோ. மொத அஞ்சும் பொம்பள புள்ளைலு. ஓவ்வொரு மொறயும் அடுத்தாப்ல ஆம்பள புள்ளைதாம்னு பெத்து தள்ளூனாம். அவன் பொண்டாட்டியும் புருஷனுக்கு ஒத்தாச பண்ணுத மாதிரி, வரிசயா பெத்து போட்டா. ஆறாவது வந்தது ஆம்பள புள்ள. அதை தூக்கிவச்சுக்கிட்டுதான் இப்பம் அலையுதாம்.

கல்யாணத்துக்கு பெறவு ரெண்டு புள்ள பொறக்குத வர, ஒரு வேலக்கும் போவாம மைனரு மாதிரி அலஞ்சுட்டிருந்தான் கருப்ப நம்பி. வேலைக்கா? எனக்கென்ன தலவிதியான்னு இருந்தாம்.கொஞ்சமா வெதப்பாடு இருந்தது. அது ஒண்ண நம்பி இருக்க முடியுமா? காலம் போற போக்குல இதுலாம் காணுமா?

ஊர்ல உள்ள பெரியாளுவோ அந்தாப்ல, ‘ஏல இப்டி இருந்தன்னா பொட்ட புள்ளயல எப்டி கரயேத்த?’னு சத்தம் போட்ட பெறவு, கூவெல பறிக்க போவ ஆரம்பிச்சான். அவன் ஆத்தாட்ட கேட்டா, மந்திரமூர்த்திக்கு ஆடு நேந்துவிட்ட பெறவுதான் புள்ளக்கு புத்தி வந்து, வேலக்கு போனதா சொல்லுவா.

கடனாநதி அணைக்கு மேல நாலஞ்சு பல்லாங்கு காட்டுக்குள்ள சைக்கிள மிதிக்கணும். ஒரே ஏத்தம். உன்னி உன்னி அழுத்தணும். அழுத்தி அழுத்தி மூசு மூசுன்னு போனா, கண்ணு மண்ணு தெரியாம தள தளன்னு வளந்து கெடக்கும் கூவெல. என்ன சிக்கலுனா கண்ணாடி விரியன் பாம்புவோ, இதுவ மேலதான் கண்ண மூடிட்டு கெடக்குமாம். பய பாம்புவோ, மத்த பாம்புவோ மாதிரி கெடயாது. சுள்ளுனு பறந்து வந்து மேல விழுந்து கடிச்சுபுடும். அதனால எல பறிக்கதுக்கு முன்னால அங்ஙன நின்னு, ஆய் வூய்னு சத்தம் போடணும். கோயிந்தபேரி அய்யப்பன், இங்ஙன பாம்பு கடிச்சு செத்ததுலயிருந்து தனியா வரமாட்டாவோ எல பறிக்க. அய்யப்பன் செத்தத நீங்க கேக்கணும். ஆங்கங்கெட்டவனுக்கு எல எது பாம்பு எதுன்னு தெரியாமயா இருப்பாம். வழக்கமா எல மேல அது படுத்துக்கிடந்திருக்கு. கொஞ்சம் உள்ள போயி, இவன் அறுத்திருக்காம். எல காம்புல அறுவாளை போட்டாம் பாருங்க. அது காம்பு இல்ல. பாம்பு வாலு. சட்டுனு திரும்பி நெத்தியில போட்டுட்டு. ரெத்தமோ ரெத்தம்.

அந்தானி, எதுத்தாப்ல செத்த நடந்தா பச்சிலை கெடக்கும். இவன் இந்த பாம்புதானேன்னு விட்டுட்டாம். அந்தாப்ல மயக்கமா வந்திருக்கு. சைக்கிள எடுத்துக்கிட்டு கீழ வந்துட்டாம். கடனாநதி அணை கிட்ட வந்தவனுக்கு அதுக்கு மேல முடியல. சைக்கிளோட குப்புற விழுந்திருக்காம். அந்தப்பக்கமா வெறவு பொறக்கிட்டு வந்தவன் எவனோ இவனை பாத்துட்டு தூக்கியிருக்காம். லேசா மொணங்கிட்டு வேற இருந்திருக்காம். பாம்பு கடிச்சுட்டுன்னு சொல்லிட்டு உருண்டுருக்காம். அந்தானி, வெறவு கெட்ட போட்டுட்டு, பதறியடிச்சு தோள்ல போட்டுக்கிட்டு ஊருக்குள்ள போயி வெஷயத்த சொன்னாம். ஊரு சனமெல்லாம் கூடிட்டு. தோள்ல இருந்து இறக்குனா பேச்சு மூச்சு இல்ல. போய் சேந்துட்டாம். இந்த சம்பவத்துக்கு பெறவு அவன் ஊர்ல இருந்து யாரும் கூவெல பறிக்க வரல.

கூவெலய பத்தி சொல்லலயே. ஓவ்வொரு எலயும் ரெண்டு கை நீளத்துக்கு இருக்கும். அகலமா இருக்காது. கல்ல போட்டு குத்து குத்துனு குத்துனாலும் எல கிழியாது. கரும்பச்ச கலருல தடிசா இருக்கும். தண்ணிய ஊத்தி கழுவுனா பள பளன்னு இருக்கும். மோந்துப் பாத்தா சந்தன வாசனை மாதிரி வரும். லேசா கிழிச்சுட்டு மோந்தா ஒரு வாசனை வரும் பாருங்கோ அதான் கூவெல வாசனை. சும்மா நல்லா இருக்கும். எல கொஞ்சம் கூம்பு மாதிரி இருக்கதால கூம்பெலன்னு இருந்து, பெறவு கூவெலன்னு ஆயிருக்குமோன்னு தோணும். ஆனா, பெயர் காரணமெல்லாம் தெரியல.

வாழ எல எப்பவும் கெடக்காது ஊருல. கெடச்சாலும் விக்குத விலையில ரொம்ப வேங்கி வைக்கவும் முடியாது. அதுனால ஒட்டலுவோல இந்த எலய வேங்கி வெச்சுகிடுவாவோ. அந்த எலய விட வெலயும் சவுரியம்.
செட்டிகுளம் கந்தனும், கருப்ப நம்பியும்தான் சேக்காளியோ. எங்கயோ கல்யாண வீட்டுல சந்திச்ச பழக்கம். அடிக்கடி போவ வரன்னு இருந்து ரெண்டு பேருக்கும் ரொம்ப உறவாயிப் போச்சு. பெற வேலக்கு போவணும்னு கருப்ப நம்பி நெனச்சத்தும்,‘இனும எவங்கிட்டயும் வேலன்னு கேக்காத; எங்கூட வா எல பறிக்க’ன்னு கூட்டிப்போனான். அன்னைக்கி போனவன். இன்னைக்கு வரைக்கும் தொடந்துகிட்டிருக்கு. சுத்து பட்டுக்கு ரெண்டுபேருந்தான் சப்ள. இவனுக்கு நாலு ஊரு. அவனுக்கு நாலு ஊருன்னு பிரிச்சு எல போடுவானுவோ. கல்யாண சீசனு நாள்கள்ல ரெண்டு பேருக்கும் கிராக்கி வந்துரும். எல்லா ஊர்லயிருந்தும் தேடி வந்துருவாவோ எல கேட்டு. அந்த நேரத்துல இவனுவ ரெண்டு பேரும் வைக்குததுதான் ரேட்டு. கெஞ்சி கேட்டா கொஞ்சம் கொறச்சுக்கிடுவானுவோ.

விரிஞ்சு கெடக்குத காட்டுக்குள்ள எலய அறுத்து அறுத்து நாலஞ்சு கெட்டுக்கு சேந்ததும் அங்ஙனயே உக்காந்து கயிற போட்டு கட்டுவாவோ. பெறவு சைக்கிளு கேரியருல வச்சு கெட்டணும். இதுகாவ பெரிய கேரியலு இருக்கும். அதுல வச்சுக்கிட்டு சைக்கிளோட சேத்து ஒரு கெட்டு. சும்மா கப்புனு உக்காந்துக்கிடும்.

பெறவு கீழ்ப்பக்கமா இருக்குத அத்ரி கோயிலுக்கு ஒரு எட்டு நட. கோயில சுத்தி, கொய்யா, மா, நார்த்தாங்கா, சீத்தாப்பாழ மரம்னு நிக்கும். கொய்யாலாம் தேங்கா மாதிரி குண்டு குண்டா வெளஞ்சு கெடக்கும். பறிக்கதுக்கு நாதி கெடயாது. காட்டுக்குள்ள யாரு வரப்போறா? கொரங்குவத்தான் கொஞ்சம் கொஞ்சம் கடிச்சு தின்னுட்டு பாதிய கீழ போட்டிருக்கும்.

இவனுவ மரத்துல ஏறி கிடைக்கத பறிச்சு கீழ போடுவானுவோ. அதுல வேணுங்க மட்டும் எடுத்துட்டு ஒரு பையில போட்டுகிடுவாவோ. சைக்கிளு முன்னால அதை தொங்கப்போட்டு வருவானுவோ...

மிச்சத்தை நாளைக்கு சொல்லுதேன்.

11 comments:

Dubukku said...

அண்ணாச்சி...நம்மூர் நடையில அருமையா சொல்லியிருக்கீங்க...ஊர் பாஷை ரொம்ப நாளைக்கப்புறம் கேக்குறேன் :))

துளசி கோபால் said...

கொய்யாப்பழமுன்னா கோபாலுக்கு உசுரு.

நானும் என்னமோ கொய்யான்னு நினைச்சுக்கிட்டு ஒரு செடியை நாலு வருசமா வளத்துக்கிட்டு இருக்கேன்.

ஒன்னு ரெண்டு பூ வந்ததோடச்சரி.

பார்க்கலாம்.

ஆமா, அந்தக் கூவ இலைன்றது கல்வாழை இலை போல இருக்குமா?

ஆடுமாடு said...

ஹாய் டுபுக்கு. வருகைக்கு நன்றி. ஒரு வழியா எல்லாரும் இந்த பச்சைக்குழந்தைய அண்ணாச்சி அண்ணாச்சின்னு கூப்டுதீங்க. நல்லாயிருக்குவோய்.

ஆடுமாடு said...

துளசி டீச்சர்.அது மாதிரிதான். ஆனா அது இல்ல.

ESMN said...

அண்ணாச்சி,
கத நல்லா இருந்துச்சு.....
இந்த கதய நான் வாசிக்க , என் நண்பர் கேட்க தியேட்டருல படம் பார்த்த மாதிரி இருந்தது....
டீ கட, கருப்ப நம்பி, எல பறிக்க போன காட்சிகள் அருமை.....

ஆடுமாடு said...

வணக்கம் எருமை அண்ணாச்சி.
//தியேட்டருல படம் பார்த்த மாதிரி இருந்தது...//
ரொம்ப ஓவரா இருக்கே.

ஆடுமாடு said...

வணக்கம் எருமை அண்ணாச்சி.
//தியேட்டருல படம் பார்த்த மாதிரி இருந்தது...//
ரொம்ப ஓவரா இருக்கே.

☼ வெயிலான் said...

அண்ணாச்சி!

திருநெவேலிக்காரவுகள எல்லாம் உங்க பக்கம் இழுத்துட்டிங்க போல இருக்கு.

ஊருக்கு போனீகன்னா கூவெல படத்த எடுத்து போட்டீகன்னா இந்த கூவையும் பாத்துக்கும்ல.

ஆடுமாடு said...

வெயிலான் ஐயா நல்ல யோசனைதான். இதுக்காகவே கேமரா வாங்கலாம்னு இருக்கேன். ஊருக்கு போனதும் நிறைய விஷயங்கள போட்டோ புடிக்க வேண்டியிருக்கு.

☼ வெயிலான் said...

// இதுக்காகவே கேமரா வாங்கலாம்னு இருக்கேன். //

காலாகாலத்துல வாங்கிக்கிடுங்க. எல்லா எடத்தயும் போட்டா புடிச்சு வச்சுக்கிட்டா, நீங்க சினிமா டைரக்டராகும் போது பிரயோசனப்படும். நேர்ல போய் லொக்கேசன் காண்பிக்க வேண்டியதில்ல பாருங்க.

ஆடுமாடு said...

வெயிலான் ஐயா நன்றி.